நடிகர் விஜய் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை பிரசுரித்து விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகளவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முடிச்சூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தர்கா உள்ளிட்ட மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் புகைப்படம், பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் பீஸ்ட் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்தாலும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைவோம் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
