புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி ரக காரின் முதல் யூனிட்டை, புது டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்
புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரை, மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட்டது. பார்வைக்கு வந்த உடனேயே அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா தார் எஸ்யூவி கார் வரும் அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அன்றைய தினம் இந்த காரின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும். மஹிந்திரா தார் எஸ்யூவி ரக காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே சமூக நலப்பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்டது. 5,400க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதியில் 1.11 கோடி ரூபாய்க்கு இந்த கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட், ஏலம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 80 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு கோரப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் பலர் ஏல தொகையை அதிகரித்து கொண்டே வந்தனர். இறுதியில் 1.11 கோடி ரூபாய்க்கு, மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
புது டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா என்பவர், இந்த ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார். என்ன வேரியண்ட் வேண்டும்? என்ன நிறத்தில் வேண்டும்? என்பதை இவர் மஹிந்திரா நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ஆகாஷ் மிண்டா விரும்புகின்றன வேரியண்ட்டை மஹிந்திரா நிறுவனம் ஒரு சில சிறப்பம்சங்களுடன், அவருக்கு வழங்கவுள்ளது.
அதாவது #1 பேட்ஜ் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த கார், ஆகாஷ் மிண்டாவிற்கு கிடைக்கவுள்ளது. இந்த ஏலத்தில் கிடைத்த 1.11 கோடி ரூபாய் பணம் முழுவதும், நந்தி பவுண்டேஷன், ஸ்வாடெஸ் பவுண்டேஷன் அல்லது பிஎம் கேர் நிதி என ஏதேனும் ஒரு அமைப்பிற்கு வழங்கப்படும். யாருக்கு வழங்க வேண்டும்? என்பதையும், ஏலத்தில் வெற்றி பெற்ற ஆகாஷ் மிண்டாவே முடிவு செய்யலாம்.
ஏலம் மூலம் திரட்டப்பட்ட பணம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில், மஹிந்திரா தார் ஏற்கனவே பிரபலமாக உள்ளது. அதனை தற்போது பல்வேறு மாற்றங்களின் மூலம் மேம்படுத்தி, புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் பலரும் கூட புதிய தலைமுறை மஹிந்திரா தார் காரை சொந்தமாக்குவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எஸ்யூவியின் அதிகாரப்பூர்வமான விலை விபரங்கள் தெரிவதற்கு இன்னும் வெறும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.