பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2000 அபராதம்…

கொரோனா எனும் கொடிய நோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா காரணமாக பலமுறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் நோய்த்தொற்று பரவல் அளவு குறைந்த பாடில்லை. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்களுக்கு அதிக அபராதம் விதிப்பது, கொரோனா நோய்த்தொற்று ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிப்பது, ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிப்பது போன்ற நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும்‘என ரமேஷ் என்பவர் நேற்று மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்றும் ஆட்டோ, பஸ்களில் அதிகமான அளவில் பயணிக்கின்றனர்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதை பொதுமக்கள் முறையாக பின்பற்றுவது இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் கூடுவதை ஊடகங்களில் காணமுடிகின்றது என்றும் தொடர்ந்து அபராதம் விதித்தாலும் பலர் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. எனவே முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் என அபராதத்தை உயர்த்தி விதித்தால் என்ன? முககவசம் அணியாமல் மீண்டும், மீண்டும் தவறு செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version