போராடும் போது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள்… மயிலாடுதுறைக்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்ட அஸ்தி!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முற்றிய கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட மேலும் நால்வர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்தான விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்தி பயணம், கடந்த 23 ஆம் தேதி சென்னை காந்தி மண்டபத்தில் இருந்து துவங்கியது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் அஸ்தியை, காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்திய வேதாரண்யத்தில் கரைப்பதற்காக மயிலாடுதுறைக்கு பயணமாக வாகனத்தில் கொண்டு வந்தனர்.

மயிலாடுதுறை வந்தடைந்த கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதில் விடுதலை சிறுத்தை, திராவிடர் விடுதலைக் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஏராளமானோர் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கண்ணீர் வடித்தனர்.

Exit mobile version