திண்டுக்கல்லில் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நாசிக் தோள்” என்னும் இசைக் குழு

திண்டுக்கல்லில் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும், நாசிக் தோள் என்னும் இசைக் குழு , பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய இசைகளில், தப்பாட்டமும் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசைக் குழு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரம் பகுதியில் “ஃபேஸ் ஆன் மாஸ்க்” என்னும் பெயரில், இந்த இசைக் குழு மிகப் பிரபலம் அடைந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இருபது மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த குழுவை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாணவர்கள் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தாங்களே பணம் சேர்த்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இசைக்கருவிகளை வாங்கியிருக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இவர்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் இந்த இசைக்கருவியை இசைத்துப் பழகியுள்ளனர். தொடர்ந்து பயிற்சியும் எடுத்து வருகின்றனர். மிக நேர்த்தியாக இசைப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கேற்ப நளினமாக நடனமும் ஆடுகிறார்கள்.

இவர்களின் இசைக் குழு, பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாணவர்களின் இசைக்குழுவை பொதுமக்கள் அழைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தங்கள் கல்விக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும், தங்களது அத்தியாவசிய தேவைகளப் பூர்த்தி செய்வதற்கும், இதில் வரும் வருமானத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதோடு தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார்கள். தங்கள் படிப்பு செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்காமல், இந்த இசைக் குழு மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்த மாணவர்கள் பயன்படுத்துவது, மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

தற்போது கொரோனா காலம் என்பதால் எந்த விதமான திருவிழாக்களும் நடைபெறாததால் இவர்களுக்கு நிகழ்ச்சி கிடைக்காமல் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே இவர்களின் லட்சியம் என்கிறார்கள், இந்த மாணவர்கள்.

படிக்கும் காலத்தில் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணாக்காமல், இதுப் போன்ற பயனுள்ள வகையில் தங்களது நேரத்தை செலவழிப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. யாரும் கற்றுத் தராமல், தாங்களாகவே இந்த இசைக்கருவியை, பலவிதமான இசை முறைகளோடு நளினமாக கற்றுக்கொள்கிறார்கள். படிக்கும் காலத்திலேயே நல்ல முறையில் சம்பாதிக்கும் இந்த இளைஞர்கள் சக மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

Exit mobile version