உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதற்கான தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
நேற்று முன்தினம் பெரு தலைநகர் லிமாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பெருவை சந்தித்தது. 6-வது நிமிடத்திலேயே பெரு வீரர் ஆந்த்ரே கரில்லோ கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.
இதன் பின்னர் 28-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். 59-வது நிமிடத்தில் பெரு வீரர் ரெனட்டோ டாபியா கோல் போட மறுபடியும் அந்த அணி முன்னிலை பெற்றது.
64-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் பந்தை வலைக்குள் திணித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய நெய்மார் கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
முடிவில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 28 வயதான நெய்மார் இதுவரை 64 சர்வதேச கோல்கள் (103 ஆட்டம்) அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரொனால்டோவை (62 கோல்) பின்னுக்குத் தள்ளினார். முதலிடத்தில் உள்ள பீலேவையும் (77 கோல்) விரைவில் முந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் அர்ஜென்டினா மாற்று ஆட்டக்காரர் ஜோகுவைன் கோரியா 79-வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு ஆட்டத்தில் ஈகுவடார் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவேக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.