இரவில் போலீஸ் காரர்…பகலில் கொள்ளை கும்பலின் தலைவர்…நெல்லையில் வசமாக மாட்டிய காவலர்

நெல்லையில், காவலர் ஒருவர் பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை என்பவர் வீட்டில், பட்டப்பகலில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அங்குக் கிடைத்த கைரேகைகளில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் பணியாற்றி வந்த காவலர் கற்குவேல் என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போய் இருந்தது.

இது பற்றி நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கற்குவேல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கற்குவேலை கண்காணித்து வந்துள்ளனர்.

அத்துடன், அவரது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர், அதில் கற்குவேல், பல கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், பல முக்கிய கொள்ளையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. நெல்லை சரக டிஐசி பிரவீன்குமார் அபிமன்யு உத்தரவின் பேரில், நெல்லை மாநில குற்ற பிரிவு சிறப்புப் படையினர் கற்குவேலை கைது செய்தனர்.

இந்த கற்குவேல், 2015ல் போலீஸ் இளைஞர் படையில் பணியில் சேர்த்துள்ளார். 2017-ம் ஆண்டு இளைஞர் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் கற்குவேலும் ஒருவர் ஆவார். இவர், பெரும்பாலும் இரவு பணியையே பார்த்து வந்துள்ளார்.இரவில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பகலில், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திப் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.போலீஸ் உடையில் இருந்ததால் அவர் மேல் மக்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை இப்போது கைரேகை மூலம் வசமாக மாட்டிக்கொண்டார்.

அவரிடம் இருந்து 15 சவரன் தங்க நகை, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கற்குவேலுடன் தொடர்பிலிருந்த பல கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version