குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பயன்படுத்தவுள்ள போயிங்777 (B777) விமானம், அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு, அக்டோபர் 1 அன்று வந்தடைந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஏர் இந்தியா ஒன்’ (Air India One) என்ற பெயரில் இந்த விமானம் அழைக்கப்படும்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு மதியம் சுமார் 3 மணியளவில், போயிங்777 விமானம் வந்தடைந்தது. இரண்டு முறை ஏற்பட்ட தாமதத்திற்கு பின்னர் இந்த விமானத்தை போயிங் நிறுவனம் தற்போது ஒருவழியாக ஏர் இந்தியாவிற்கு டெலிவரி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் இரண்டு போயிங்777 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில், ஒன்றுதான் தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. மற்றொரு விமானத்தை போயிங் நிறுவனம் இன்னொரு நாளில் டெலிவரி செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு போயிங்777 விமானங்களிலும், எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகள் (SPS- Self Protection Suites) இடம்பெற்றிருக்கும். அத்துடன் எல்ஏஐஆர்சிஎம் எனப்படும் (LAIRCM – Large Aircraft Infrared Countermeasures) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இந்த இரண்டு விமானங்களிலும் வழங்கப்பட்டிருக்கும்.
விவிஐபிக்கள் பயணம் செய்யும்போது, இந்த இரு போயிங்777 விமானங்களும் ஏர் இந்தியா விமானிகளால் இயக்கப்படாது. அதற்கு பதிலாக இந்திய விமானப்படையை சேர்ந்த விமானிகளால்தான் இயக்கப்படும். தற்போதைய நிலையில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் ஏர் இந்தியாவின் போயிங்747 (B747) விமானத்தில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது
இந்த போயிங்747 விமானங்களை ஏர் இந்தியாவை சேர்ந்த விமானிகள் இயக்கி வருகின்றனர். ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited – AIESL) அவற்றை பராமரித்து வருகிறது.
ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படும் இந்த போயிங்777 விமானங்கள், பாதுகாப்பு அடிப்படையில், அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்திற்கு இணையானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எரிபொருள் நிரப்புவதற்கு நிறுத்தாமலேயே, அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இந்த விமானத்தால் பறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
போயிங்777 விமானங்களில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக அலுவலக பயன்பாட்டிற்கு என தாராள இடவசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்டிங் நடத்துவதற்கான அறைகள், அதிநவீன தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவற்றையும் இந்த விமானங்கள் பெற்றுள்ளன. மேலும் மருத்துவ ரீதியிலான அவசரம் என்றால், அதனை கையாள்வதற்கான தனி பிரிவும் இந்த விமானத்தில் உள்ளதாக கூறப்படுகிறது