ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை…

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைக்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழலில் நேற்று ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
பின்னர், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
ஏற்கனவே முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அ.தி.மு.க.வில் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் ஆலோசனை
இந்த சூழலில், துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை, கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வழிகாட்டுதல் குழு அமைத்தல், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் விவாதித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், துணை முதல்வர் நடத்திய இந்த ஆலோசனை அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version