முதுகலை ஆசிரியர் நியமனத்தில் புதிய பட்டியல் தயாரிக்க உத்தரவிட வேண்டும் – முதல்வருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய பட்டியல் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை துடைக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்துவிட்டனர். அவர்களில் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேதியியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதை எதிர்த்து ஆசிரியர் வாரியம் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி பிறப்பித்த இந்த ஆணையை அடுத்த 2 வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாத ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. சமூகநீதியின் புதிய பாதுகாவலராக அவதாரம் எடுத்துள்ள மு.க.ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த சமூக அநீதியை கண்டும், காணாமல் 7 மாதங்களாக வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? எனவே உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி புதிய பட்டியல் தயாரித்து பணி ஆணை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் ஆணையிட வேண்டும் என  அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version