
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையான பூர்த்தி செய்ய உலக நாடுகள் முன்வந்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செத்து மடிந்து வருகின்றனர். நாள்தோறும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக மடியும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை அனுப்பி வைக்கவும் ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
முதற்கட்டமாக ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவை இந்தியாவிற்கு வந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 400 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றும், இந்தக் கருவிகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.