பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்க கூடாது…

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்க கூடாது
தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்கவே கூடாது என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டியலின தலைவர்கள்
சிதம்பரம் அருகில் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்குத் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
இந்த நிகழ்வு பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு. சமத்துவத்திற்கும் – ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

தி.மு.க. உறுதி
பட்டியலினத்தவரும் – பழங்குடியினத்தவரும் அதிகாரத்தில் பங்கேற்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் – மாநிலத்தின் முன்னேற்றத்தில் – நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடனும் உரிமையுடனும் ஈடுபட வேண்டும் என்பதில் தி.மு.க. என்றைக்கும் உறுதியுடன் இருக்கிறது.

அவமதிக்க கூடாது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவருக்கு நடைபெற்ற நிகழ்வு, தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆகவே, இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது; அ.தி.மு.க. அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version