பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் 2019-ல் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினார். அந்த மனுவில் தன்னை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு என்ன தடை உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், பல்வேறு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு பேரறிவாளன் விண்ணப்பித்து இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் வராததால் பேரறிவாளன் தனது கருணை மனுவின் நிலை குறித்து தகவல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தனது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வரும் 7-ஆம் தேதிக்குள் மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.