72 குண்டுகள் முழங்க இசையோடு கலந்தார் எஸ்.பி.பி.,.. முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்திய திரையுலகில் முன்னணி பின்னணி பாடகர் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்ட நிலையில், மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நுங்கம்பாக்கத்த்தில் உள்ள அவரது வீட்டில் எஸ்.பி.பியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

எஸ்.பி.பியின் மறைவு இந்திய திரையுலகிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற திரைத்துறை, அரசியல் என பல துறைகளைச் சார்ந்தவர்களும் எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து, எஸ்.பி.பி அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்காக கொண்டு நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் கூடிய எஸ்.பி.பியின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்களுடன் நடிகர் விஜய், இயக்குனர் பாரதிராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட ஏராளமான திரை ரசிகர்களும் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதைதொடர்ந்து, எஸ்.பி.பியின் குடும்ப முறைப்படி அனைத்து மரியாதையும் செய்யப்பட்டு, 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிர் பிரிந்தாலும் இசை உள்ள வரை இந்த கலைஞனுக்கு இறப்பு என்பது ஏது.. என்றும் அவரது ரசிகர்களின் மனதில் எஸ்.பி.பி நிலை கொண்டிருப்பார்.

Exit mobile version