கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

கவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் இன்று காலை 9.33 மணிக்கு காலமானார். கவிஞருக்கு வயது 86.

கவிஞர் புலமைப்பித்தன் 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றுள்ளார். 1935ல் கோவையில் பிறந்த புலமைப்பித்தன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார்.

சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் இவர் சில காலம் பணிபுரிந்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் நெருங்கிய நண்பர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார், நான் யார், நீ யார்? என்ற பாடலின் மூலம் புலமைப்பித்தன் தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்ல இருக்கனும் நாடு முன்னேற என்ற பாடலையும் இவர் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம் பெற்ற தாய்மை பாடலையும் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதிமுக அவைத்தலைவர் பதவியும் புலமைப்பித்தன் வகித்துள்ளார். மேலும் தமிழக சட்டமன்ற மேலவை துணை தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். புலமைப்பித்தனின் மறைவிற்கு மூத்த தலைவர்கள், திரைப்பட துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version