விவசாயிகளை ஒன்றிய அரசு மூர்க்கமாக கையாளுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நாட்டின் உணவு உற்பத்தியை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளை ஒழித்து கட்டுவதற்கு என்றே ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட “அடக்குமுறை விவசாய சட்டங்களுக்கு” எதிராக கடந்த முறை போராடிய விவசாயிகள் மீது வார்த்தைகளில் சொல்ல முடியாத வன்முறையை ஒன்றிய பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டது. உலகமே இதுவரை பார்க்காத வகையில் சாலைகளில் ஆணி படுக்கைகளை அமைத்து, போராடிய விவசாயிகள் மீது வன்முறையை ஏவியது.
ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசுக்கு அப்போது இருந்ததை விட இப்போது பாசிச வெறி அதிகரித்திருக்கிறது இல்லையா? அதுவும் “தேசத்தை ரட்சிக்கும் ராமர் கோயில்” கட்டிய பிறகு “நம்மை யாரால் என்ன செய்ய முடியும்” என்கிற மமதை அதிகரித்துள்ளதால், இப்போது போராடும் விவசாயிகளை மூர்க்கமாக கையாள முடிவு செய்திருக்கிறது ஒன்றிய அரசு. போராடும் விவசாயிகளை செவிடாக்க “சோனிக்” என்கிற தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
லட்சக்கணக்கான விவசாயிகள் கூடுவதை கையாளுவதற்கு “LDAR” என்று அழைக்கப்படும் “Long Range Acoustic Devices” பயன்படுத்தப்படுகிறது. இதை “கூட்டத்தை கையாளும் ஒலி பீரங்கிகள்” என்று அழைக்கிறார்கள். இந்த வகையான இயந்திரங்கள், ஒற்றை திசையில், உயிரை பாதிக்காத வகையில், “அதிதீவிர ஒலி அலைகளை” எழுப்பி கேட்பவரின் செவிகளை கிழித்து, அவர்களின் கேட்கும் திறனை அழித்துவிடும்.
இத்தகைய மனிதத்தன்மையற்ற செயலை செய்பவர்களை மனிதர்கள் என்று கூட சொல்லக்கூடாது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எதை எதையோ தாமாக முன் வந்து விசாரிக்கும் உச்சநீதி மன்றம் இதையும் விசாரிக்க வேண்டும்.
எளிய மக்களுக்கு எதிரான அதிகாரத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை வீழ்ததுவதுதான் விவசாயிகளுக்கு இந்த நாடு செய்யும் மரியாதையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.