ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்துள்ள புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும். மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். நம்பிக்கை, சந்தோஷம், நிறைய வெற்றிகள் கிடைக்கும் ஆண்டாக இது அமையட்டும்’ என தெரிவித்துள்ளார்.