முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை. தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மீறப்பட்டுள்ளது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், ”முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக, இந்த கலந்தாய்வு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளான ஆகஸ்ட் 31 அன்று, கல்லூரி நிர்வாகங்களே 100 க்கும் மேற்பட்ட இடங்களை நேரடியாக நிரப்பிக் கொண்டன.
இதனால் அதிக மதிப்பெண் பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடங்கள் இருந்தும் கிடைக்கவில்லை. இது பெரிய முறைகேடாகும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மிக முக்கிய படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியார் கல்லூரிகள் நடத்திய மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது. மாணவர் சேர்க்கைக்கான காலநீட்டிப்பிற்கு அனுமதி பெற்று, தமிழக அரசு இறுதிகட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்பிற்குரியதாகும்.
எந்தக் காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை நேரடியாக சேர்த்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்