காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இம்மாதம் இறுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல்.
டெல்லி, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி என எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவும், கூட்டணியாகவும் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் போட்டியை சந்திக்கிறது.
இவை தவிர மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள் பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்கள்; அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உ.பி மாநில தேர்தல் பொறுப்பாளரான பூபேஸ் பாஹீல் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் டெல்லியில் உ.பி தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.