என்ரிகா லெக்சி இத்தாலிய எண்ணெய் கப்பல்-மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்க தடை

என்ரிகா லெக்சி கப்பலில் இருந்த இத்தாலி கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளருக்கு  ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உததரவிட்டுள்ளது, 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.வி என்ரிகா லெக்சி எனும் எண்ணெய் கப்பல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு இந்திய மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த எண்ணைக் கப்பலில் இருந்த இத்தாலிய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அஜீஸ் மற்றும் ஜலாஸ்டின் ஆகிய இரு இந்திய மீனவர்கள் உயிரிழந்தனர்.அந்த மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று தவறாக நினைத்து விட்டதாக இத்தாலி தரப்பு தெரிவித்தது. துப்பாFக்கிச் சூட்டில் ஈடுபட்ட சல்வடோர் ஜிரோனி, மேசிமிலியனோ லட்டோரே ஆகிய இத்தாலிய கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

2013ம் ஆண்டு சிறை விடுப்பில் அவர்கள் இத்தாலி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அவர்கள் இத்தாலி சென்ற பின்பு அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இத்தாலி அரசு தெரிவித்துவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்காக இத்தாலி அரசிடம் இருந்து இந்தியா ரூ.10 கோடி இழப்பீடு தொகை பெற்றது. உயிரிழந்த இருவரும் குடும்பத்தினருக்கு தலா 4 கோடி ரூபாய் வழங்கவும் விசைப்படகு உரிமையாளருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டின் போது விசைப்படகில் இருந்ததால் காயமடைந்து உயிர் பிழைத்த 7 மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இழப்பீட்டு தொகையை பிரித்து வழங்க வேண்டும் என்று கூறினர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பேனர்ஜி அமர்வு, விசைப்படகு உரிமையாளருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் 2 வாரங்களில் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version