திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மளிகை கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் ஷான். இவர் அருகில் உள்ள கூவனூரில் கடந்த 10 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் வசித்து வருபவர் ஹாரூன். ஹாரூன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். ஷானுக்கும், ஹாரூனுக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன் ஹாரூன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் மைக்செட் சவுண்ட் வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ஷான் மளிகை கடையில் வியாபாரம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் தக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுவதற்காக சென்றார். மியாசுதின் என்பவரது வீட்டின் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த ஹாரூன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஷான் நெஞ்சில் சுட்டுள்ளார். வெடிசத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஷான் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த ஹாரூனை கைது செய்தனர்.