பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை-இந்தியா மீது சீனா கடும் எதிர்ப்பு

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியா தடை செய்ததன் காரணமாக இந்தியா மீது சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பப்ஜி

இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி என்ற விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.ஏற்கனவே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.இந்த நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது . தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் சார்பாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “ சீன செயலிகளுக்கு எதிரான இந்தியாவின் தடை, சீனாவின் முதலீட்டாளர்களுக்கும் சேவை வழங்குபவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது. மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த கவலை அளித்து கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது” என்றார்.

Exit mobile version