கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்பினர் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த 300 சபைகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட சபைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சபை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கென இருக்கும் சிறு அளவிலான கல்லறைகள் நிரம்பி வழிவதால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒரே குழியைத் தோண்டும் அவலநிலை நீடித்து வருகிறது. குடும்பக் கல்லறைகள் போல கட்டிக் கொள்ளவும் இடமில்லாத நிலை நிலவி வருகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லறை நிலம் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்த பின்னரும் இடம் கிடைப்பதில் மெத்தனமும், தாமதமும் நிலவி வருகிறது.
இறந்த பின்னர் கூட அந்த உடலை புதைப்பதற்கு நிம்மதியற்ற சூழல்தான் தற்போது நிலவி வருகிறது எனத் தெரிவித்தனர். கல்லறைக்கான இடத்தை தாமதமின்றி ஒதுக்க வேண்டும். அரசு அதிகாரிகளுடன் உடனடி சந்திப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version