மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 2020-2021ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இதில் பொதுப்பிரிவு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு எனத் தனியாக இடம் ஒதுக்கப்படும். இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% சதவீதம் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் விவரம்
அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜன், 710 என்ற மாணவர் முதலிடத்தை பிடித்தார். மோகன பிரபாகர் ரவிச்சந்திரன், ஸ்வேதா, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தேனியைச் சேர்ந்த ஜீவித் குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்பரசன், இரண்டாம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, 620 மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கலந்தாய்வு வரும் 18-ம் தேதி காலையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்கள் எந்தத் தேதியில் வரவேண்டும் என்பதை அவர்களுடைய செல்போனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆன்லைன் மூலமாகவும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். அதை அறிந்து மாணவர்கள் சரியான நேரத்திற்கு வருகை தரவேண்டும் .ஒவ்வொரு மாணவருக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினசரி 500 நபர்கள்
மாணவர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து சரியான முறையில் கவுன்சிலிங் நடத்தப்படும். தினந்தோறும் 500 பேருக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே வர அனுமதி தரப்பட உள்ளது.
மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டது 23,707. மாநில அரசுக் கல்வித் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 15,885. சி.பி.எஸ்.இ. பாடதிட்டம் மூலம் படித்த மாணவர்கள் 7,366. ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம் படித்தவர்கள் 285, மற்ற பாடதிட்டம் மூலம் படித்தவர்கள் 171 பேர். விண்ணப்பித்தவர்களில் நடப்பாண்டு மாணவர்கள் 9,596 பேர். கடந்த ஆண்டு மாணவர்கள் 14,111 பேர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version