ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

ராஜ்பவன் மாளிகையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார்.

சென்னை, கிண்டியில் ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில்தான் தமிழகத்தின் ஆளுநர்களாக பொறுப்பு ஏற்பவர்கள் வசித்து வருவது வழக்கம். தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித் இந்த மாளிகையில்தான் வசித்து வருகிறார். இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்குக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள், ஆளுநர் அல்லது உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் மருத்துவர் அளித்த ஆலோசனைப்படி 7 நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பு:-

ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆளுநர் மாளிகை மருத்துவர் நேற்று ஆளுநருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். இதில் ஆளுநர் பூரண உடல் நலத்துடன் இருப்பது உறுதியானது. ஆளுநரை 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஆளுநர், தன்னை 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.இவ்வறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version