ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்துவகை ஆன்லைன் சூதாட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாணவர் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முதல் உயிரிழப்பு என்று கூற முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் என்பது சாதாரணமான தீமை அல்ல. போதாக்குறைக்கு ஆன்லைன் ரம்மி குறித்து இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப் படுகின்றன.,

ஆன்லைன் ரம்மி ஆடினால், முதலீடு செய்யும் பணத்தை விட 9 மடங்கு வரையிலான பணத்தை 3 நிமிடங்களில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டப்படுகிறது. அவற்றால் கவரப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதன்பின் வாழ்க்கையில் மீள்வதே இல்லை. பலர் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர். சிலர் உயிரையே இழந்து விடுகின்றனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டங்களின் தீமைகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதமோ, அலட்சியமோ காட்டக்கூடாது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், அதை செயல்படுத்துவதற்காக புதிய சட்டம் இயற்றுவது குறித்தும் மத்திய அரசு ஆராய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version