தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை… தயார் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை தமிழக கடலோரப் பகுதியை நெருங்க உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது போலவே பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுமைக்கும் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களிலும் இரவிலிருந்து இடைவெளி இல்லாமல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணிநேரத்தில் 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84மி. மீ. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி. மீ பதிவாகியுள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று வரை 362.94மி. மீ மழைப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 42 சதவீதம் அதிகமாகும்.

கனமழை காரணமாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் குறித்த அறிவிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் 434 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சைரன் ஒலி மற்றும் பொது அறிவிப்பு வாயிலாகவும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் தொடர்ந்து அளிக்கப்படும்.

பேரிடர் காலத்தில் தடையில்லா தகவல் தொடர்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு இயக்குநர், பிஎஸ்என்எல், ஜியோ, வோடபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் 50 நடமாடும் டவர்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு அமைப்புகளைச் சீரமைக்கத் தேவையான போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவி செய்யும். 2015ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் போது தொலை தொடர்பு சாதனங்களை உபயோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மற்றும் சிலிண்டர்கள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் கேஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இருப்பை உறுதி செய்யவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், எண்ணெய் குழாய்கள், ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்கண்ட முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ள நீர் சூழ வாய்ப்புள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளைக் கண்டறிய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். மழை மற்றும் புயல் காலங்களின் போது பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான திட்டத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர மறுக்கும் நிலையில், அவர்களைச் சமாதானப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு போதுமான அளவு அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைப்பதற்கும் சமையல் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மர அறுப்பான்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகி இருக்கக்கூடிய நீர் நிலைகளைக் கண்டறிந்து இந்த நீர் நிலைகளில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக சரி செய்யத் தேவையான அளவு மணல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 22 நிவாரண முகாம்களில் 1,723 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 49 ஆயிரத்து 570 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 206 பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டது. எஞ்சியுள்ள 184 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக பணியாளர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. மழைநீர் சூழப்பட்ட 16 சுரங்க பாதைகளில் 14 சுரங்க பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்தைச் சீர் செய்யப்பட்டுள்ளது. 1775 மருத்துவ முகாம்கள் மூலம் 37 ஆயிரத்து 780 பேர் பயனடைந்துள்ளனர்.
மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46 படகுகளும் மழை நீரை வெளியேற்ற 46 ஜேசிபிகளும் 375 ராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மழை தொடர்பாக 6694 புகார்கள் வரப்பெற்று அவற்றில் 2840 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ராமச்சந்திரன், “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களில் மழை காரணமாக 5 பேர் இறந்துள்ளனர். 64 கால்நடைகள் இறந்துள்ளது. 538 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

இந்திய விமானப் படை, கப்பல் படை, கடலோர காவல் படை, ராணுவம் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை அதிகாரிகளுடன் அவசரக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலும் இந்திய கடற்படையின் 5 டோனியர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அதுபோன்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version