கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டும் அறிவித்து முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கொரோனாவினால் உலகமே தத்தளித்து செய்வதறியாது திகைத்து நின்ற நிலையிலும், இரவு பகல் பாராமல் தங்கள் உயிரையும் துச்சமென்று எண்ணி, களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள், தொண்டு உள்ளம் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆவர்.அவ்வாறு பணியாற்றியவர்களில் பலர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துமுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, ஏப்ரல் 22-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய் தடுப்புப் பணியில் பணியாற்றி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும்” என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 28-ஆம் தேதி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக ஆவணங்களை சமர்ப்பிக்க பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகத்துக்கு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் இயக்குநர் ந.வெங்கடாசலம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலும், 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டும் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.