அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், டெடி பியர் உடை அணிந்து கொண்டு, 644 கிலோ மீட்டர் தூரம் நடந்து, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டினார். அவர் 5.3 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்க, அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
நல்ல செயல் ஒன்றுக்காக, அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், நீண்ட நடை பயணம் மேற்கொண்டார். அதுவும், டெடி பியர் உடை அணிந்து கொண்டு சென்றிக்கிறார். அவர் எதற்காக இப்படி செய்தார் என தெரிந்த பலர் அவருக்கு உதவ, நிதி குவிந்திருக்கிறது. ஜெஸ்ஸி லாரியோஸ் (வயது 33) என்ற அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு டெடி பியர் உடை அணிந்து கொண்டு நடந்து சென்றிருக்கிறார். 644 கிலோ மீட்டர் நடைபயணம் செய்திருக்கும் அவர், தற்போது வரை 7,100 டாலர்கள் நிதி திரட்டி இருக்கிறார். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 5.3 லட்ச ரூபாய்!!
இந்த ஐடியா தனக்கு திடீரென தோன்றியதாக தெரிவித்திருக்கும் ஜெஸ்ஸி, அந்த கதாபாத்திரத்துக்கு பியர்சன் என பெயர் வைத்திருக்கிறார். ஏப்ரல் 12ஆம் தேதி அவர் தனது நீண்ட நடைபயணத்தை துவங்கியிருக்கிறார். அவர் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவ, சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோபண்ட்மீ பக்கத்தில், தொண்டு நிறுவனத்துக்காக அவர் நிதி திரட்டி வருகிறார். ஆனால் அது யாருக்கு என அவர் தெரிவிக்கவில்லை. சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தபின் முழு விவரத்தையும் தெரிவிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
லண்டனில் கடந்த ஆண்டு தனது பாட்டிக்கு நிதி திரட்டுவதற்காக, 10 வயது சிறுவன் ஒருவன், 2,800 கிலோ மீட்டர் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.