சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என்று தேவஸ்தான போர்டு தலைவர் வாசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது தாமதமாக தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கும், உடல் நலம் குன்றிய பக்தர்களுக்கும் நிலக்கல்லில் குறைந்த கட்டணமான ரூ.625-ல் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை 86 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில், சபரிமலை தரிசனத்திற்கு தற்போதும் ஆன்லைன் முன் பதிவு நடைபெறுவதாகவும், அதற்கு முன்பதிவு மையங்கள் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5000 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. முன்பதிவு, கொரோனா பரிசோதனை, பிரசாதம் ஆகியவற்றிற்கான கட்டணம் என கூறி பணத்தை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் எந்த வித கட்டணமும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றது. எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் தேவஸ்தான தலைவர் கூறி உள்ளார்.