தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதனையடுத்து பொதுத் தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் வகுப்பு நடத்தி பாடங்களை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.
தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை மட்டுமே பள்ளிகளில் வகுப்பு எடுக்க முடியும். அதனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தும் போதே ஆய்வாக பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டுமென தெரிவித்தது.
இந்நிலையில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெயில் காரணமாகவும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வசதியாகவும் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.