நீங்கள் திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன்தான்.. சூர்யாவை பாராட்டிய சீமான்!

நடிகர் சூர்யா திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி இருக்கிறார். .

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே கொதித்து போய் உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பின் இருக்கும் அரசியல் குறித்து சூர்யா வெளிப்படையாக பேசி உள்ளார். ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், என்று சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பெரிய அளவில் தமிழகம் முழுக்க ஆதரவு அதிகரித்து வருகிறது. சூர்யா மிகவும் துணிச்சலாக பேசி இருக்கிறார். பெரும் அரசியல் தெளிவுடன் சூர்யா குரல் கொடுத்துள்ளார். நீட்டிற்கு பின் இருக்கும் சிக்கல்களை, அடிப்படை பிரச்சனைகளை மிக நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார். அகரம் பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்த சூர்யா மாணவர்களுக்காக பேசி உள்ளார், என்று பலரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி இருக்கிறார். அதில், நீட்’ தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்! அவர் திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான், என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவை சீமான் பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்.நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் மதுரையைச் சேர்ந்த தங்கை ஜோதிஸ்ரீ துர்காவும், தருமபுரியைச் சேர்ந்த தம்பி ஆதித்யாவும், திருச்செங்கோட்டையைச் சேர்ந்த தம்பி மோதிலாலும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து துயரமடைந்தேன்.

அரியலூரைச் சேர்ந்த தம்பி விக்னேசு நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட பெரும் காயத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே நடந்தேறிய இக்கொடும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது. எவ்விதச் சொற்கள் கொண்டும் ஆற்றுப்படுத்த முடியாத அளவுக்குப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கிற அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.

Exit mobile version