ஒரு கோட்டில் இருந்து பிரிந்து இரு துருவங்களில் இணைந்த அண்ணனின் தம்பிகள்

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களமே சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு  பிரசாரம் செய்து வருகின்றனர்.  இதர கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் பரபரப்பாக இருக்கின்றன. ஆனால், ஒரு கட்சி  அதன் உட்கட்சி மோதல்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன் ஆதரவாளர்களை தம்பிகள் என்று செல்லமாக அழைக்கும் அண்ணனின்  நாம் தமிழர் கட்சி தான் அது.

  தன் தம்பிகளே தனக்கு துரோகம் இழைப்பதாக அண்ணன் சீமான் வெளிப்படையாகவே பேசி வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் பேராசிரியர் கல்யாண சுந்தரமும் கட்சியை விட்டு விலகினர். 

இதில் பேராசிரியர் கல்யாண சுந்தரம் கட்சியில் இருந்து விலகிய கையோடு அதிமுகவில் இணைந்து விட்டார். வழக்கறிஞர் ராஜீவ் காந்தி வேறு கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.நாம் தமிழர் கட்சியினர் தமிழ் தேசிய கொள்கைகளை பின்பற்றுகிறவர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டும் தான் ஆள வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறவர் சீமான்.

ரஜினி கட்சி தொடங்க போகிறேன் என்று சொல்லிவந்த போது, கூட “அவர் தமிழர் அல்ல, அவர் தலைமை தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை”  என வெளிப்படையாக எதிர்த்தார் சீமான்.  ஈழத்தின் இறுதி யுத்தத்தில், விடுதலை புலிகள் இயக்கம் தோல்வியடைந்து இல்லாமல் போனது. இதற்கு முக்கிய காரணம் சிங்கள ராணுவதத்திற்கு துணை போன, மத்திய மற்றும் மாநில ஆளுங்கட்சிகளான காங்கிரஸ் – திமுக தான் என குற்றம் சாட்டினார் சீமான். அந்த கோபத்தினால் திராவிட கட்சிகளுக்கு எதிராக, பிரபாகரனை தலைவனாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் நேரடியாகவே திராவிட கட்சியினரை சாடி பேசிவருகிறார் சீமான். ஆனால், இன்று அவரின் தம்பிகளே கட்சியில் இருந்து விலகி ஆளுக்கொரு திராவிட கட்சிகளில் இணைந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி என்று அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளின் விலகல் கட்சியை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்  இணைந்துள்ள கல்யாணசுந்தரம்,  உண்மையான தமிழ் தேசிய ஆட்சி செய்வது நாம் தமிழர் கட்சி அல்ல அதிமுக தான் என கூறியுள்ளது நகை முரண்.

ReplyForward
Exit mobile version