மகாத்மா காந்திக்கு கனடாவில் பனிச் சிற்பம்! எதற்காக தெரியுமா?

கனடாவில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில், மகாத்மா காந்தியின் பனிச் சிற்பம் நிறுவப்பட்டிருக்கிறது. இததொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தி. இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்தவர்.

இவர் நடத்திய அறவழி போராட்டமான சத்தியாகிரகம், இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தியா விடுதலை பெற முக்கியக் காரணமாக அமைந்தது. அஹிம்சையை உலகுக்கு போதித்த இவரை, “சுதந்திர இந்தியாவின் தந்தை” என மக்கள் போற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கனடாவில் உள்ள புகழ்பெற்ற ஐஸ் ஹோட்டலான ‘ஹோட்டல் டி கிளாஸ்’ மகாத்மா காந்தியின் பனிச் சிறப்பத்தை நிறுவி அவரை கவுரவித்துள்ளது. 7 அடி உயரத்தில் பனியால் உருவாக்கப்பட்ட அவரது சிலை, கடந்த வாரம் நிறுவப்பட்டிருக்கிறது.

கியூபெக் நகரை சேர்ந்த பனி சிற்ப கலைஞரான மார்க் லெபயர், காந்தியின் பனிச் சிற்பத்தை வடித்திருக்கிறார். டொராண்டாவில் இருக்கும், இந்திய துணை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இதன் புகைப்படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

இந்த புகைப்படங்களுக்கு இந்தியர்கள் லைக்ஸ்களை குவிக்க அது வைரலாகி வருகிறது. நமக்கு முன்னதாகவே இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் கனடாவை சேர்ந்த ஹோட்டலுக்கு நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version