உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகம் குறித்து வருவாய் துறை செயலாளர் அமுதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கங்கள் ஊடகங்களின் வழியே மக்களை உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அரசின் வழியாகத் தெரிவிக்கப்படும் விவரங்கள், தகவல்கள் தெளிவாகவும், சரியாகவும் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசின் ஊடகச் செயலர்களாக மூத்த ஐஏஎஸ்., அதிகாரிகள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவராக நானும் நியமிக்கப்பட்டு இப்போது உங்களைச் சந்திக்கிறேன். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் நோக்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது, முதல்வரின் முகவரித் துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் துறை பொதுத் துறையின் கீழ் இயங்குகிறது. முதல்வர் தனது பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் குறைதீர் பிரிவு, 1100 என்ற எண்ணில் செயல்படும் அழைப்பு மையம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணவே முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் மூலமாக, 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, 1.01 கோடி மனுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் எனவும், அலைச்சல் இல்லாமல் வீடுகளுக்கு அருகிலேயே அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பித்து தீர்வு காணவும் முதல்வர் அறிவுறுத்தினார். இதைக் கருத்தில் கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, திட்டத்துக்கான 2,058 முகாம்கள் நகரப் பகுதிகளில் நடந்தன. இதில், 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
இரண்டாவது கட்டமாக ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை 2,344 முகாம்கள் நடந்தன. அதில் 12.81 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 95 சதவீத மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஜனவரியில் தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தினோம்.
அதன்மூலம், 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 1.47 மனுக்களுக்கு பைசல் செய்யப்பட்டன. இந்த முகாம்களின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளோம். இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்குகிறோம். இந்தத் திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைக்கிறார். இதற்காக முகாம்கள் நடைபெறும் பகுதியில் ஏற்கெனவே வீடு வீடாக விழிப்புணர்வுப் பணிகள் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் அளிக்கப்பட உள்ளன.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் அடிப்படையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு என்ற நிலையில் தற்போது அது 45 நாட்களில் தீர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம். மனுதாரர்கள் தங்களின் மனுக்களது நிலைமையை உங்களுடன் ஸ்டாலின் இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். இதற்கான பிரத்யேக இணையதளத்தை சிதம்பரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளஇல் 3,738 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நடத்தப்பட்டதை விட, இரண்டு மடங்கும் முகாம்களின் எண்ணிக்கையை இப்போது அதிகரித்துள்ளோம். இதற்கான பயிற்சிகள் ஆட்சியர்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள், கணினி இயக்குநர்களுக்கு தரப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் ஜூலை 15-ல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடக்கவுள்ளன.
இந்த ஒரு மாத காலத்தில் நகரப் பகுதிகளில் 1,428-ம், ஊரகப் பகுதிகளில் 2,135-ம் நடக்கவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு இடங்களில் நாள்தோறும் ஆறு முகாம்கள் நடத்தப்படும். செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்துக்கு நான்கு நாள்கள் முகாம்கள் நடத்தப்படும். இவற்றுக்கு வரக்கூடிய மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன என்கிற விவரங்கள் முதல்வர் துவங்கி வைக்கவுள்ள பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 4 கவுன்டர்களும், துறை வாரியான சேவைகளைப் பெற 13 கவுன்டர்களும், இ-சேவை மற்றும் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்வதற்கான சேவைகளை வழங்க தலா 2 கவுன்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத் தொகையைப் பெற விடுபட்ட தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு முகாமிலும் 4 கவுன்டர்களும் பிரத்யேமாக உருவாக்கப்பட்டு இருக்கும். இணைய சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள் ஒவ்வொன்றுக்கும் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருவோரிடம் இ-சேவை மையங்களின் சேவையைப் பெறுவதற்கான கட்டணம் பாதியாக மட்டுமே அதாவது 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அமுதா தெரிவித்தார்.