உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனது வயிற்றில் லக்கேஜ் கொண்டு செல்லும் டிராலி விழுந்ததில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் நடிகர் சோனு சூட் செய்த மருத்துவ உதவியால் அந்த சிறுவன் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்காக நடிகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நடிகர் சோனுசூட் கொரோனா ஊரடங்கின்போதிலிருந்தே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரன் என்ற சிறுவனின் வயிற்றின் மீது லக்கேஜ் கொண்டு செல்லும் டிராலி ஒன்று மேலிருந்து கீழே விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். அவனை மருத்துவனையில் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை கரனின் பக்கத்து வீட்டுக்காரரான ரிஷப் என்பவர் சோனு சூட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனிடையே உள்ளூர் மக்கள் கொடுத்த சிறிய தொகை மூலம் மீண்டும் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அந்த சிறுவன்.
சிறுவனின் நிலை குறித்து ட்வீட் போட்ட ரிஷப்பிற்கு சோனு சூட் குழுவினரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரிடம் சிறுவனுடைய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்ட அந்த குழுவினர் நேரடியாக லக்னோ மருத்துவமனைக்கு சென்று தங்கள் காரில் சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கொண்டு ராம் மோகன் லோஹியா எனும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதன் பின்னர், சிறுவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரர் ரிஷப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.