கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி! எஸ்.பி.சரண் தகவல்!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள பாடகர் எஸ்.பி.பி., ஐபிஎல் போட்டியைக் காண ஆவலாக உள்ளதாக அவருடைய மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறாா். இயன்முறை சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா். மருத்துவக் குழுவினா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று எம்ஜிஎம் மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தகவல் தெரிவித்ததாவது:

எஸ்.பி.பி.யின் நுரையீரல் செயல்பாடு முன்னேற்றம் அடைந்து வெண்டிலேட்டர் உதவி தேவையிருக்காது என எண்ணினோம். ஆனால் வெண்டிலேட்டரை நீக்கும் அளவுக்கு நிலைமை மாறவில்லை. நல்ல செய்தி என்னவென்றால் கரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி.பி. குணமடைந்து விட்டார். அதைவிடவும் அவருடைய நுரையீரலின் பாதிப்பு விரைவில் குணமாக வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது குணமாகிவருகிறது என்றாலும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

கடந்த வார இறுதியில் அப்பா – அம்மாவின் திருமண நாளை சிறிய அளவில் கொண்டாடினோம். தன்னுடைய ஐ பேடில் கிரிக்கெட், டென்னிஸ் ஆட்டங்களைப் எஸ்.பி.பி. பார்த்து வருகிறார். ஐபிஎல் போட்டியைக் காண ஆவலாக உள்ளார். நிறைய எழுதி, அதன்மூலம் எங்களிடம் அடிக்கடி தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார். அவர் சுயநினைவுடன் உள்ளார். இயன்முறை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நம்பிக்கையுடன் இருப்போம் என்றார்.

எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோ

Exit mobile version