அன்பை ‘ஐ லவ் யு’ என்று தான் வெளிப்படுத்த வேண்டுமா என்ன?

காதலுக்கு இலக்கியங்கள் எழுதி காலம் காலமாய் விவாகரத்து என்றாலே என்னவென்று தெரியாமல் வாழ்ந்து வந்தவர்கள் இந்தியர்கள். நமக்கு எதற்கு இந்த ‘ஐ லவ் யு’, ‘ஐ மிஸ் யு’ எல்லாம்..அன்றாட வாழ்க்கையில், சிறு சிறு தருணங்களில் வெளிப்படுத்தப்படும் அன்பில் மறைந்திருக்கிறது அழகு…அதில் சில இதோ!

‘நான் பாத்துக்கறேன், நீ கவலை படாதே’

இந்த வார்த்தையில் இல்லாத எது இருக்கிறது ‘ஐ லவ் யு’ வில்.

சின்ன பிரச்சனையோ, பெரிய தகராறோ, இந்த வார்த்தைகளில் வெளிப்படும் அன்பும் ஆறுதலும் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறது.

உண்மையில் அந்த பிரச்சனையை நீங்கள் சரி செய்ய முடிந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வார்த்தையே போதுமானது. நான் உன்னுடன் இருக்கிறேன், உன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள. நீ தனியாக எதிர்கொள்ளத் தேவையில்லை என்ற அர்த்தம் போதாதா உங்கள் அன்பைச் சொல்ல

இதை மற்றவர்கள் சொன்னாலே ஆறுதல் தான், வாழ்க்கைத் துணை சொல்லும்போது, அதன் அனுபவமே தனி

‘எனக்கும் அவங்க அம்மா தானே’

தங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கம் ஒவ்வொரு திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு

20-30 ஆண்டுகள் வளர்ந்த குடும்பத்தை தங்கள் கணவன்/மனைவியும் மனதார ஏற்றுக் கொண்டால், திருமண வாழ்க்கையில் அதைவிடப் பெரிய வெற்றி இல்லை

அதற்காக அனைவரும் விக்ரமன் படத்தில் வருவது போல் ஒரே குடும்பமாய் ஆடி பாடப் போவதில்லை. அவ்வப்போது நேரில் சென்று ஒரு வேளை உணவு உண்பதோ, வெளியில் சென்று வருவதோ, இது போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் போதாதா குடும்பத்தில் ஒருவராய் உணர!

‘எனக்கு உன் நிலைமை புரியுது’

இது தான். இந்த ஒரு வார்த்தைக்காகத் தான் அனைவரும் கூறுவார்கள், கணவன்-மனைவி நல்ல நண்பர்களாய் இருப்பது அவசியம் என்று

கணவன் மனைவி இருவரும் ஜோக் அடிக்கவும் ஊர் சுற்றவும் மட்டும் நண்பர்களாய் இருந்தால் போதாது. வேலையில்,அவரவர் குடும்பங்களில் நடக்கும் விஷயங்களில் நல்ல புரிதல் வேண்டும். அது இருந்தாலே பிரச்சனைகள் வராது.

வேலையில் அதிக நேரம் செலவாகிறதா, பரவாயில்லை. நீ அதை கவனி. என்னால் உன் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்ற அந்தப் புரிதலில் இருக்கிறது உங்கள் அன்பு.

உன் குடும்பத்திற்குப் பணம் வேண்டுமா, இருவரும் சேர்ந்தே அதை ஏற்றுக் கொள்வோம். உன்னில் நானும் சேர்ந்தே இருப்பேன் என்ற அந்தப் புரிதலில் இருக்கிறது அன்பு

‘நீ எதுவும் பண்ணவேண்டாம், ரெஸ்ட் எடுத்துக்கோ’

மனைவிக்கு பரிசளித்துப் பாருங்கள். மகிழ்ச்சியடைவார்கள். ‘இன்று நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம், ரெஸ்ட் எடுத்துக்கோ’ என்று கூறிப் பாருங்கள். அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

உங்கள் கணவருக்குப் பரிசொன்றும் தேவையில்லை. திருமணம் ஆவதற்கு முன் அவர் விரும்பிச் செய்த ஏதோ ஒன்றை நீங்கள் மீண்டும் அளித்தாலே போதும். சிறிய கேம், அல்லது அவரது நண்பர்களுடன் ஒரு நாள் வெளியே செல்வது என்று அவர் மீண்டும் வராதா என்று ஏங்கிய ஏதோ ஒன்றைக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் கணவர் சாக்லேட் சாப்பிடும் பிள்ளை போல மாறிவிடுவார்

அன்பில் தான் எத்தனை விதம்!

தவறு செய்து விட்டாயா, பரவாயில்லை. இருவரும் சேர்ந்து தானே வாழ்கிறோம். சேர்ந்தே இதைச் சரி செய்யலாம்.

நீ எனக்காக இருப்பதைப் போலவே நானும் எப்போதும் உனக்காக இருப்பேன். தைரியமாக இரு.

பிறர் முன் என்னைப் பெருமையுடன் நீ அறிமுகப் படுத்தலாம். குணத்திலும், நடந்து கொள்ளும் விதத்திலும் உன்னை எப்போதும் ஏமாற்றி விடாத முறையில் இருப்பேன்.

நீ எனக்காக உன் கடந்த கால வாழ்க்கையை முற்றிலும் விடத் தேவையில்லை .

உன்னை நேரடியாக கிண்டல் அடித்தாலும், விளையாட்டாக கேலி செய்தாலும் உன்னை ஒரு போதும் பிறரிடம் விட்டுக் கொடுக்கமாட்டேன்

நம் திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு நீ செய்வதைப் போன்றே நானும் முயற்சி செய்யத் தயாராக இருக்கிறேன்

இப்படி ஒரு கணவன்/மனைவி அமைந்தால் எத்தனை இன்பம் வாழ்வில்!

Exit mobile version