டெல்லி பாடத்திட்டத்தில் மாற்றம் – ஜவாஹிருல்லா கண்டனம்

டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம்.

டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி போன்ற எழுத்தாளர்கள் பெண்ணியம் குறித்தும் தலித்தியம் குறித்தும் தமது படைப்புகளில் விரிவாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு பரந்துபட்ட வாசகர்கள் உண்டு. தனது கருத்தியலுக்கு முரண்படும் சிந்தனைகளை பாடத்திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும் செயலினை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்த வரிசையில் டெல்லி பல்கலைகழகத்தின் பாடநூல்களிலிருந்து இந்த மூன்று எழுத்தாளர்களின் ஆக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது.

வரலாறு, அறிவியல், சமூகவியல், கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான வகைமைகளில் தொடர்ந்து தனக்கு ஒவ்வாத கருத்துக்களை ஒன்றிய அரசு நீக்கி வருவதாக செய்திகள் வருகின்றன. நீக்கப்பட்ட பாடத்திற்கு பதிலாக வலதுசாரி சிந்தனைகளைக் கொண்ட வரலாற்றுத் திரிபுகள் பொதிந்துள்ள பிற்போக்கு சிந்தனைகளை பாடத்திட்டத்தில் புகுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

கல்வி புலத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்ட குழுக்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒன்றிய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடி பணியக் கூடாது. நீக்கப்பட்ட பாடத்திட்டங்களை டெல்லி பல்கலைகழகம் மீண்டும் சேர்க்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா

Exit mobile version