செப்டம்பர் 14 ம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகிறதா ? அரசு விளக்கம்

செப்டம்பர் 14 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து இந்த தகவல் போலியானது என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் போடப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கில் தொடர்ந்து பல தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.அதனை பின்பற்றி தமிழக அரசும், செப்டம்பர் 30 ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்துவிட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூட, பள்ளிகள் திறப்பு தற்போது வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக வருகிற 14-ந்தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது போலவும் செய்திக்குறிப்பு ஒன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிடப்பட்டது போல சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக தகவல் பரவியது.இதைப் பார்த்து பலர் இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதா? என்றும் பரபரப்பாக பேசினர். ஆனால் அந்த செய்திக்குறிப்பு போலியானது என்றும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது.

Exit mobile version