“ஆசிரியர் பணி நியமன வயதை உயர்த்த வேண்டும்”… போராட்டத்தில் ஈடுபட்ட ‘கனவு’ ஆசிரியர்கள்!!

ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர்.



தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிகளில் உள்ள 2,207 காலி பணி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கு 19ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொது பிரிவினர் என்றால், 40; மற்ற பிரிவினருக்கு 45 வயதுக்கு மேல் இருக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதுநிலை பட்டதாரிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதனால், முதுநிலை பட்டதாரிகள் குழுவினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பட்டதாரிகள் குழுவை சேர்ந்த வேடன் எனும் ஆசிரியராகும் கனவில் இருக்கும் இளைஞர் தெரிவிக்கும் போது, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு 57 வயது வரை ஆட்களை நியமிக்கலாம் என்ற அரசாணை, பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனால், பட்டப்படிப்பு முடித்து அரசு ஆசிரியர் பணி தேர்வுக்காக காத்திருக்கும், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, வயது வரம்பை தளர்த்தி 57 வயது வரை பணி நியமனத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். என பேசினார்.

Exit mobile version