இன்று நாடுமுழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது,இதையொட்டி ஆளுநர்,முதலமைச்சர்,பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற தத்துவஞானியும், அறிஞரும், கல்வியாளரும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய மனிதர்களை உருவாக்குக்கின்றனர்.ஆசிரியர்களின் உயரிய அனுபவங்களே மனித வரலாற்றில் வாழ்வையும், ஒளியையும் இணைக்கும் புள்ளியாகிறது . இத்தகைய ஒளி விளக்குகளை ஒளிரச் செய்திடும் கருவியாக உள்ள ஆசிரியர்களின் உன்னத முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து வரும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’,
சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ போன்ற சிறப்புமிக்க விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் கற்பித்து , வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்த நாளில் எனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவர்களை தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ,தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.