காரணத்தை ஆராய வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு உயர்வுக்கான காரணத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 22 லட்சத்து 13,005 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இறப்பு 44,475 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது. இதன்மூலம் உலகிலேயே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிற நாடுகளில் முதல் இடத்தை இந்தியா பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் நூற்றுக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரத்தில் இந்தியாவில் 10 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்பதை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல இறப்பு விகிதம் 2.07 ஆக இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. சென்னையை விட கோவை, விருதுநகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. அதிகமாக பரிசோதனை செய்தால் தான் விரைவாக கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டன. கொரோனாவை எதிர்கொள்ள மாற்று திட்டமும், அணுகுமுறையும் உடனடியாக தேவைப்படுகிறது. எனவே, கொரோனா தொற்று குறித்துப் பயந்து, சோதனைக்கு மக்கள் தயாராக இல்லாதப் போக்கிலிருந்து விடுவிப்பதற்கு, தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய – மாநில அரசுகள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தொடங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version