செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடுவதற்காக மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, இது கண்டிக்கத்தக்கது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பிற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுவதே தவறு ஆகும். செம்மொழி நிறுவனம் என்பது தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும், அதன் பழமை குறித்தும் ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். அது தனித்து செயல்பட்டால் தான், அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

செம்மொழித் தமிழாய்வுக்காக இருக்கும் மத்திய நிறுவனத்தை மூட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையில் கூறியிருக்கும் மத்திய அரசு, அதே ஆவணத்தில் பிற பல்கலைக்கழகங்களில் செம்மொழி நிறுவனத்திற்கு இணையான சமஸ்கிருத மொழித் துறையை அதிக எண்ணிக்கையில் தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது.

ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து விட்டு, தனித்த ஆராய்ச்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டுமாம். மொழிக்கு ஒரு நீதி என்பது எவ்வகையில் நியாயம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தமிழாராய்ச்சிப் பணிகளைப் படிப்படியாக விரைவுப்படுத்தி, அதை விரைவில் செம்மொழித் தமிழாய்வு மத்தியப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version