உடல் எடை அதிகம் உடையவர்களை, கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் வாய்ப்பு அதிகம் என, கரோலினா பல்கலைக்கழகம் நடத்தில் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உடல் பருமன், இவற்றிற்க்கு இடையேயான தொடர்பு குறித்து, வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
பேராசிரியர் பாரி பாப்கின் தலைமையிலான, இந்தக் குழுவின் ஆய்வு முடிவில், கொரோனா வைரஸ் மற்றும் உடல் பருமன் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் உள்ளவர்களில், (அதாவது, பி.எம்.ஐ. 30 க்கும் மேல் உள்ளவர்கள்) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள், அதிக ஆபத்தில் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், உடல் பருமன் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 74 சதவிகிதமும், உயிரிழப்பதற்கான வாய்ப்பு 48 சதவிகிதமுமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு, நீரிழிவு நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சம்பத்தப்பட்ட் நோய் ஆகியவை கொரோனா வைரஸின் ஆபத்துக்கான அடிப்படை காரணிகளாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவையனைத்திற்க்கும் உடல் பருமனும் ஒரு காரணமாக அமைந்துள்ளன.
நோய்த்தொற்றின் போது, ஒரு வைரஸ் உடலுக்குள் நுழையும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்துதான், அதன் பாதிப்பு அளவு இருக்கும். உடல் எடை அதிகம் இருக்கும் நிலையில், பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட் 40 சதவிகிதத்தினர் உடல் எடை அதிகம் உள்ளவர்கள். இதனால்கூட அமெரிக்காவில் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். எனவே, வரும் நாட்களில் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க உடல் எடையை சீராக வைத்துக்கொள்வது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விலை மலிவான மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில், சர்க்கரை, சோடியம், கொழுப்பு மற்றும் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகக் காணப்படுவதால், உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சத்தான உணவுகள், நம்மை நோய் தாக்கத்தில் இருந்து காக்க உதவும். எனவே, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தால், பெருமளவு பாதிப்பை தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.