3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம்..! எகிப்தில் தோண்டத்தோண்ட கிடைத்த அதிசயம்..!

எகிப்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நினைவுச்சின்னம் நிறைந்த நகரமான லக்சரில் 3000 ஆண்டுகள் பழமையான “லாஸ்ட் கோல்ட் சிட்டி” (எல்ஜிசி) எனும் தொலைந்துபோன தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது. புகழ்பெற்ற எகிப்திய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு, நாட்டின் உச்சக்கட்ட பழங்கால கவுன்சிலுடன் இணைந்து, மணலின் கீழ் புதைந்த நகரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

பிரமிடுகள், மம்மிகள் உள்ளிட்ட பல வரலாற்றுப் பொக்கிஷத்தை தன்னகத்தே கொண்ட நாடு தான் எகிப்து. அங்கு தோண்டத்தோண்ட பல அதிசயங்கள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் தற்போது புதையுண்டு போன ஒரு தங்க நகரத்தை எகிப்திய தொல்பொருள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இது சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் எனக் கூறப்படுவது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நகரம் “தி ரைஸ் ஆஃப் ஏடன்” என்று அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் அமன்ஹோடெப்பின் ஆட்சிக்கு முந்தையது. மேலும் துட்டன்காமுன் மன்னரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

“துட்டன்காமுனின் சவக்கிடங்கு கோவிலைத் தேடி பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்த பகுதியில் பணியாற்றினர். ஏனெனில் ஹோரெம்ஹெப் மற்றும் அய் இருவரின் கோயில்களும் இங்கு காணப்பட்டன.” என்று ஹவாஸ் ஒரு அறிக்கையில் கூறினார். எனினும் வெளிநாட்டு நிபுணர்களின் பயணங்கள் நகரத்தைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டன.

இந்த கண்டுபிடிப்பை எகிப்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நகரமாகக் குறிப்பிடுகையில் ஹவாஸ், “எல்ஜிசி மிகப் பெரிய ஆட்சியாளர்களில் ஒருவரான அமென்ஹோடெப் III, 1391 முதல் 1353 பி.சி. வரை ஆட்சி செய்த 18’வது வம்சத்தின் ஒன்பதாவது மன்னரால் நிறுவப்பட்டது” என்று விளக்கினார்.

அவரது மகன், பிரபலமான அமென்ஹோடெப் IV (அகெனாடன்), எட்டு ஆண்டுகளாக நகரத்தை ஆளுவதற்கு அமென்ஹோடெப் III’க்கு உதவினார் என்று அவர் மேலும் கூறினார்.

லக்ஸரின் மேற்குக் கரையில் எகிப்திய சாம்ராஜ்யத்தின் சகாப்தத்தில் எல்ஜிசி மிகப்பெரிய நிர்வாக மற்றும் தொழில்துறை குடியேற்றமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 2020’இல் ஆய்வைத் தொடங்கிய எகிப்திய குழு, கிட்டத்தட்ட முழுமையான சுவர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் கருவிகளால் நிரப்பப்பட்ட அறைகளுடன் நன்கு பாதுகாக்கப்பட்ட நகரத்தைக் கண்டறிந்துள்ளது.

“இந்த இழந்த நகரத்தின் கண்டுபிடிப்பு துட்டன்காமுனின் கல்லறைக்குப் பிறகு இரண்டாவது மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்பு” என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் எகிப்தியலின் பேராசிரியர் பெட்ஸி பிரையன் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு வரலாற்றின் மிகப் பெரிய மர்மத்தில் ஒன்றை வெளிச்சம் போட உதவும் என்று அவர் மேலும் கூறினார். 1346 பி.சி.யில் புதிதாக நிறுவப்பட்ட தலைநகரத்தின் எச்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு விரிவான எகிப்திய தொல்பொருள் தளமான அமர்னாவுக்கு ஏன் அகெனாட்டனும் நெஃபெர்டிட்டியும் செல்ல முடிவு செய்தனர் என்பது வெளிவரும் என அவர் மேலும் கூறினார்.

Exit mobile version