சென்னையில் மதுபோதையில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அம்சா (64). இவரது மகன் சதீஷ் என்கிற சதீஷ்குமார் (36). கடந்த 9-ம் தேதி இரவு மதுபோதையில் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் சதீஷிற்கும் அவரின் அம்மா அம்சாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், பெற்ற தாய் என்றுகூட பாராமல் அம்சாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். அதில் அம்சா மயங்கிவிழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட அம்சாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அம்சா கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து அம்சாவின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர் தொடர்ந்து சதீஷிடம் விசாரித்தனர். விசாரணையில் அம்சாவின் கன்னத்தில் அறைந்த சதீஷ்குமார், பின்னர் அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார் என்பதை தெரிவித்துள்ளார். அதனால்தான் அம்சா உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அம்மாவை கொலை செய்த மகன் சதீஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.