கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தான் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார் நடிகர் ரஜினி. இதற்கு காரணம், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அது தனது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறிய அறிவுரை எனவும் அவர் விளக்களித்திருந்தார். ரஜினியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவரது அரசியல் வருகைக்காக இன்னமும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ரஜினியின் முடிவை விமர்சித்தும், கிண்டலடித்தும் வந்தனர்.
இந்த சூழலில், கொரோனா 2வது அலை பரவ தேர்தல் ஆணையமே காரணம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விருப்பம்போல அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்த போது வேற்றுக் கிரகத்தில் இருந்தீர்களா? என தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பிடி பிடித்து விட்டது. அதோடு, கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா விரித்தாடும் நிலையை, அன்றே கணித்துதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறி, #அன்றேசொன்னரஜினி என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.