குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது “தேர்தல் சட்ட திருத்த மசோதா-2021”.
டெல்லி,
மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைவதற்கான பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது; கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் வைக்கப்பட்ட பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இன்று காலை மக்களவையில் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதில்,
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு.
- ஜனவரி,ஏப்ரல்,ஜூலை மற்றும் அக்டோபர் என வருடத்தில் நான்கு முறை வாக்காளர் சேர்க்கை நடத்தப்படும்.
- தேர்தல் ஆணையம் எந்த ஒரு வளாகத்தையும் தேர்தல்நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள அதிகாரம்.
உள்ளிட்ட அம்சங்கள் புதிய தேர்தல் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் திருத்த மசோதாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது; வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வித்திடும் என எதிர்க் கட்சிகளும்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் “தேர்தல் திருத்த மசோதா-2021” மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்திருந்தார். இவை நாடாளுமன்ற முறைப்படி மக்களவையில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டதாக அவை தலைவர் அறிவித்தார். மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு சட்டமாக்கப்படும்.