தேர்வுக்கட்டணத்தை ஒப்படைக்க வேண்டும்

தமிழ்நாட்டில் மருத்துவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு  பருவத்  தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட  தேர்வுக் கட்டணத்தை உடனடியாக பல்கலைக்கழகத்தில் செலுத்தும்படி கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து பட்டப் படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கான இறுதி பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்துப் பருவங்களிலும் தேர்ச்சி அளிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவம் தவிர்த்த அனைத்து பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அத்தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அதில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, நடப்புப் பருவத் தேர்வுகளுக்கான அனைத்துக் கல்லூரிகளும் வசூலித்துள்ள தேர்வுக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியை மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ளவிருக்கிறது. அதற்காக தேர்வுக்கட்டணம் முழுவதையும் தங்களிடம் வழங்கும்படி பல்கலைக்கழகம் கோருவதை ஏற்க முடியாது. நடப்பு பருவத் தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட இந்த தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்க அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version